விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பகுதியில், தினேஷ் (23) என்ற இளைஞர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று பட்டப்பகலில் தினேஷின் கடைக்கு சொகுசு கார் ஒன்றில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்த அந்த கும்பல், தினேஷை குறிவைத்து சரமாரியாக வெட்டியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள், தினேஷை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டு அந்த மர்ம கும்பல் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பியோடியது.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர படுகொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
