திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில், விடுதி மாணவிகளுக்கு நள்ளிரவில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய விவகாரத்தில் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி தாளாளர் உள்பட 6 பேர் மீது தற்பொழுது காவல்துறை அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட அந்த தனியார் கல்லூரி விடுதி வார்டன், அங்கு தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் ரீதியிலான அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதோடு மட்டுமில்லாமல், இரவு நேரங்களில் மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அசிங்கமான முறையில் ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி அத்துமீறி வந்துள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த இந்த பாலியல் தொல்லைகள் குறித்தும், பிவிபி (PVP) பொறியியல் கல்லூரியில் தங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் கல்விச் சூழல் சரியாக இல்லை என்பது குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவுக்குத் தங்களது புகார்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த உறுதியான புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் செல்வகுமார் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்ட மொத்தம் 6 பேர் மீது காவல்துறை தற்பொழுது அதிரடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கல்வி கற்கும் இடத்தில் மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அவலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய செய்தியாகப் பேசப்பட்டு வருகிறது.
