ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, கடந்த மே 15, 2026 அன்று நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முதலில் கோவிட்-19 பேரிடர், பின்னர் உலகளாவிய போர்கள், தற்போது ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக, இந்தத் தசாப்தம் உலகிற்கு ஒரு பேரழிவு காலமாக மாறி வருகிறது என்று எச்சரித்தார்.
உலகளவில் நிலவும் இந்த மோசமான சூழல் விரைவில் மாறாவிட்டால், கடந்த சில தசாப்தங்களாக நாடுகள் அடைந்த வளர்ச்சி அனைத்தும் வீணாகி, லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், உலகிற்குத் தேவையான நம்பகமான மற்றும் வெளிப்படையான விநியோகச் சங்கிலியை உருவாக்க இந்தியா-நெதர்லாந்து இடையேயான கூட்டாண்மை மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் இந்தியத் தூதர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின் போது டச்சு பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்துப் பேசவுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, குறைக்கடத்திகள் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார்.
இந்தியா இன்று மக்களின் பெரிய கனவுகளோடும் லட்சியங்களோடும் வேகமாக மாறி, ஜனநாயக ரீதியாக வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், நெதர்லாந்துடனான இந்த உறவு இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
