அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று எதிரணியில் உள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல், பொதுக்குழுவைக் கூட்டுவதற்காக மாவட்ட வாரியாகப் பொதுக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துக் கையெழுத்து பெறும் பணிகளிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை அறிந்த எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவைக் கூட்டக் கோரி யாராவது வந்தால் கையெழுத்து போட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியும், எடப்பாடி பழனிசாமி பெயரைப் பயன்படுத்தி யாராவது கையெழுத்து கேட்டால் தர வேண்டாம் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
அதனை மீண்டும் வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் எந்தவிதமான படிவத்திலும் கையெழுத்திட வேண்டாம் என்று திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
