நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், கட்சித் தலைமைக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த திடீர் ஆக்ஷன் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 2 முக்கிய மாவட்டச் செயலாளர்கள் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை நீக்கப்பட்ட மா.செ.க்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியைத் தன் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் இந்த அடுத்தடுத்த விக்கெட் காலி நடவடிக்கைகள், அதிமுக கோட்டையையே உலுக்கி வருகிறது.
