தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது சென்னை சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ராஜ்மோகனைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அர்ச்சுனா, தமிழ் மக்களுக்காகத் தமிழக முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இதுவரை அவருக்கு முதலமைச்சர் விஜய்யைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் பேசிய அர்ச்சுனா, முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்திக்க முடியும் என்ற பெரிய நம்பிக்கை தனக்கு இல்லை என்றும், அவர் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வை நேரில் காண ஆசைப்பட்டும் இலங்கை பாராளுமன்ற அமர்வுகள் காரணமாக வர முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்துக்காக இம்முறை வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய மாற்றம் சாத்தியமில்லை எனப் பல அரசியல் ஆய்வாளர்கள் கூறியபோதிலும், இந்த மாற்றம் நிச்சயம் நடக்கும் என்பதைத் தான் தொடர்ந்து கூறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.