புனேவில் உள்ள உஷா கிரண் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த வழக்கில், சோலாப்பூரைச் சேர்ந்த சிவாஜி ரத்தோடு என்ற இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது.

கடந்த மே 10 அன்று அந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற சிவாஜியிடம், மருத்துவக் கட்டணமாக 7 லட்சம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் வரை கடனில் இருந்த அவர், இந்த அதிகப்படியான கட்டணத்தால் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், நிர்வாகத்தை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக யூடியூப் வீடியோக்களைப் பார்த்து 400 ரூபாய் செலவில் டிஜிட்டல் கடிகாரம், ஒயர்கள் மற்றும் பைப் துண்டுகளைக் கொண்டு நிஜ வெடிகுண்டு போன்ற ஒரு போலி சாதனத்தைத் தயாரித்துள்ளார்.

கடந்த மே 13 அன்று மருத்துவமனை வளாகத்தில் அந்தப் போலி குண்டை வைத்துவிட்டு அவர் புனேவிலிருந்து தப்பியோடினார். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பீதி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு அது போலி குண்டு என்பதை உறுதிப்படுத்தினர்.

பின்னர் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களைக் கொண்டு தீவிரமாகத் தேடி வந்த போலீசார், அகோலா ரயில் நிலையத்தில் அவர் தப்பிய போதிலும், இறுதியில் நாக்பூர் ரயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் நாக்பூரிலிருந்து ஹவுரா வழியாகத் தன் சகோதரி வாழும் நேபாள நாட்டிற்குத் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மேலதிக விசாரணைக்காகப் புனேவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.