உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் இந்திராபுரம் பகுதியில், ஜிம் பயிற்சியாளர் கொடுத்த ஸ்டெராய்டு ஊசிகளால் இளைஞர் ஒருவரின் இடுப்பு எலும்பு முற்றிலும் பாதிப்படைந்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கமல் காந்த் தியாகி என்ற இளைஞர், வேகமாக உடல் எடையைக் குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற ஜிம் சென்றுள்ளார்.

அங்குள்ள பயிற்சியாளர் குல்ஜார் கான் என்பவர், தனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று ஆசை வார்த்தை கூறி, ஒன்றரை மாதத்தில் 33 ஸ்டெராய்டு ஊசிகளை அந்த இளைஞருக்குச் செலுத்தியுள்ளார்.

இதற்காக சுமார் 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர் வசூலித்துள்ளார். ஊசி போடும்போது அதன் விவரங்கள் தெரியாமல் இருக்க அதன் கவர்களைப் பிரித்து எறிந்துவிட்டு ரகசியமாகச் செலுத்தியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜிம்முக்குச் சென்ற சில மாதங்களிலேயே அந்த இளைஞருக்குக் காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில், ஸ்டெராய்டு ஊசிகளின் தாக்கத்தால் அவரது வலது பக்க இடுப்பு எலும்பு நான்காவது கட்ட பாதிப்பை எட்டி, முற்றிலும் சிதைந்துவிட்டது தெரியவந்தது.

தற்போது அந்த இளைஞர் நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அந்தப் பயிற்சியாளர் தன்னை ‘துபாய் சான்றிதழ் பெற்றவர்’ என்று கூறி ஏமாற்றியதாக அந்த இளைஞர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இளைஞர்கள் குறுக்கு வழியில் உடல் அழகைப் பெற முயற்சிப்பதும், ஜிம் பயிற்சியாளர்களின் முறையற்ற அறிவுரைகளைக் கேட்பதும் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.