அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் ஹா  என்பவர்,  தனது பெற்றோரின் வீட்டுத் தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த புதர்களுக்கு இடையே மறைந்திருந்த ஒரு வகை அதிபயங்கர நச்சுப் பாம்பை மிதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பாம்பு, அவரை இரண்டு முறை கொடூரமாகக் கடித்தது. பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே கிறிஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

அவரது நாக்கு மரத்துப்போய், நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கி, சுவாசிப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.பாம்பின் விஷம் அவரது நரம்புகளில் நேரடியாகக் கலந்ததால், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் அசாதாரண முறையில் ரத்தக் கட்டிகள் உருவாகும் ஓர் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று அவருக்கு ஏற்பட்டது.  கிறிஸின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

முதலுதவி அளிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்த 36 நச்சு முறிவு  ஊசிகளும் தீர்ந்துபோனதால், அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஸ்டான்போர்ட் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு மேலும் 18 ஊசிகள் செலுத்தப்பட்டு, ஒட்டுமொத்தமாக 54 நச்சு முறிவு ஊசிகள் கிறிஸின் உடலில் ஏற்றப்பட்டன. பொதுவாகப் பாம்பு கடித்தவர்களுக்கு சில ஊசிகளே போதுமானதாக இருக்கும் நிலையில், இவருக்கு 54 ஊசிகள் போடப்பட்டது மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில்  மரணப் போராட்டத்திற்குப் பின் கிறிஸ் உயிர் பிழைத்தார்.

ஆனால், அவர் குணமடைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்குள், மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த பில் அவர்தம் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவின் அறை வாடகை மற்றும் ஒரு நச்சு முறிவு ஊசியின் விலை 13,000 டாலர் என கணக்கிட்டு, மொத்தம் 1.3 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாய் பில் போடப்பட்டுள்ளது. காப்பீடு  இருந்தாலும், இந்த  தொகையின் ஒரு பகுதியைத் தங்களின் கைகளில் இருந்து எப்படிச் செலுத்துவது என்று தெரியாமல் அந்த குடும்பம் தற்போது தவித்து வருகிறது.