உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் சூழலில், ரஷியாவுக்குக் கிடைக்கும் ராணுவ நிதி ஆதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத இறக்குமதி வரி விதிப்பதற்கான புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ரஷிய அதிபர் புதினுக்குப் போர் நடத்தத் தேவையான நிதி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மூலமே கிடைக்கிறது என்பதைக் கணக்கு போட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதால், இந்தியப் பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்திருந்தார். பின்னர் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அது திரும்பப் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 500 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்த போதிலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர் மற்றும் குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் ஆகியோர் இணைந்து இந்த 100% வரி விதிப்பு மசோதாவை உருவாக்கியுள்ளனர். மறைந்த உறுப்பினரின் நினைவாக இதற்கு ‘லிண்ட்சே ஓ கிரஹம் ரஷிய பொருளாதார தடை சட்டம்-2026’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதாவின்படி, ரஷியாவிடம் அதிகமாகக் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, சுலோவாகியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என ரிச்சர்டு புளுமெந்தல் தெரிவித்துள்ளார்.
60-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவுடன் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா, ரஷியாவின் அரசியல் தலைமை மற்றும் எரிசக்தி துறை மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த 5 நாடுகளும் வாங்கும் எண்ணெய்யின் அளவை 180 நாட்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து, அதற்கு ஏற்ப வரியை மாற்றியமைக்கவும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.
அதே நேரத்தில், இந்த மசோதாவில் அமெரிக்கா தனக்குச் சாதகமாகச் சில விலக்குகளையும் அளித்துள்ளது. தங்களின் மொத்த தேவையில் 15% மட்டுமே ரஷியாவிடம் இருந்து கியாஸ் வாங்குவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த 100 சதவீத வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது சொந்த அணு உலைகளுக்காக ரஷியாவிடம் அமெரிக்கா வாங்கும் யுரேனியத்திற்கும், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் இருநாடுகளுக்கு இடையே நடக்கும் கூட்டுச் செயல்பாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மற்றொரு நாட்டின் போர் முயற்சிகளுக்கு நிதி அளிக்கும் நாடுகளைத் தண்டிக்க, வரிவிதிப்பை ஒரு புவிஅரசியல் ஆயுதமாக அமெரிக்கா நாடாளுமன்றம் பயன்படுத்துவது இதுவே முதல்முறையாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.
