பீகார் மாநிலத்தை  சேர்ந்த மாந்திரீகர் ஒருவர், மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா  பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபரின் உடல் முண்டமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின் முடிவில், அது  மாந்திரீகர் என்பதும், அவர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் அதிரடி விசாரணையில், இந்த கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கொல்லப்பட்ட மாந்திரீகரின் மனைவிக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்களது காதலுக்கு கணவன் முட்டுக்கட்டையாக இருந்ததால், அவரை நிரந்தரமாகத் தீர்த்துக்கட்ட மனைவியும் அவரது கள்ளக்காதலனும் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் தங்களது நண்பர்கள் சிலரையும் இந்தச் சதியில் இணைத்துக் கொண்டு,  அவரது வீட்டில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.

மாந்திரீக வேலை இருப்பதாகக் கூறி நம்பவைத்து அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கே மறைந்திருந்த கள்ளக்காதலன் மற்றும் அவனது கூட்டாளிகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். பின்னர், கொலையாளிகள் அவரது தலையைத் துண்டித்துவிட்டு, உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவம் நடந்து இரண்டே நாட்களில், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் கொலையாளிகளை நெருங்கினர். இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான மாந்திரீகரின் மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் என மொத்தம் 5 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.