ஜப்பானில் தற்கொலை, கொலை, விபத்து அல்லது தனிமையில் நிகழ்ந்த மரணங்கள் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ‘ஜிகோ புக்கன்’ என்று அழைக்கப்படுகின்றன. ஜப்பானிய கலாச்சாரத்தில் இத்தகைய இடங்கள் துரதிர்ஷ்டம் மற்றும் ஆவிகளின் நடமாட்டம் கொண்டவையாகக் கருதப்படுவதால், மக்கள் அங்கு குடியேறவோ அல்லது அவற்றை வாங்கவோ அச்சப்படுகின்றனர்.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றிப் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. இந்த வீடுகளை மீண்டும் வாடகைக்கு விட அல்லது விற்பனை செய்ய ‘காச்சிமோட்’ என்ற ஜப்பானிய சொத்து மேலாண்மை நிறுவனம் ஒரு விசித்திரமான உத்தியைக் கையாண்டு வருகிறது.
இந்த வீடுகளில் பேய் நடமாட்டம் அல்லது அமானுஷ்ய சக்திகள் எதுவும் இல்லை என்பதை மக்களுக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, சிறப்புப் புலனாய்வாளர்களை நியமித்து அங்கு ஒரு முழு இரவைக் கழிக்கச் செய்கிறார்கள். இந்த வேலைக்காக ஒரு சொத்துக்கு சுமார் 88,000 யென் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 31,000 வரை செலவிடப்படுகிறது.
அங்கு தங்கும் நபர்கள் இரவு முழுவதும் விசித்திரமான சம்பவங்கள் எதையும் எதிர்கொள்ளவில்லை எனில், அவர்கள் ஒரு முறையான பாதுகாப்பு அறிக்கையை வழங்குகின்றனர். இந்த அறிக்கை, வீட்டை வாங்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ தயங்கும் புதிய வாடிக்கையாளர்களின் பயத்தைப் போக்கி அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
இந்நிலையில் பார்ப்பதற்கு மிகவும் பயமுறுத்தும் வேலை போல் தெரிந்தாலும், ஜப்பானின் ரியல் எஸ்டேட் சந்தையில் முடங்கிக் கிடக்கும் வீடுகளை மீட்டெடுக்க இந்தத் திட்டம் தற்பொழுது பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
