φதற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று கரப்பான் பூச்சி தொல்லை. குறிப்பாக, மழைக்காலங்களில் பாதாள சாக்கடைகள்  வழியாக வெளியேறும் கரப்பான் பூச்சிகள், எளிதாக நம் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றன. சமையலறையின் இருண்ட பகுதிகள், அலமாரிகள் மற்றும் டிராயர்களில் தஞ்சமடையும் இவை, வீட்டின் சுகாதாரத்தைக் கெடுப்பதுடன் பல நோய்களுக்கும் வழிவகுக்கின்றன. சந்தையில் விற்கப்படும் ரசாயன ஸ்பிரேக்கள் மற்றும் கெமிக்கல்களைப் பயன்படுத்தியும் பலன் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு, இயற்கை முறையில் இதற்கு தீர்வு காண ஒரு சிறந்த வழி உள்ளது.

நம் வீட்டின் உட்புறத்தில் வளர்க்கப்படும் சில குறிப்பிட்ட ‘இண்டோர் பிளான்ட்ஸ்’ , தங்களின் இயற்கையான நறுமணத்தின் மூலம் கரப்பான் பூச்சிகளை வீட்டிற்குள் அண்டவிடாமல் தடுக்கின்றன. இதில் முதலாவதாக, நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பிரியாணி இலை மற்றும் புதினா  ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிரியாணி இலையில் உள்ள சில இயற்கை வேதிப்பொருட்களின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு  ஏற்படுத்தும் என்பதால், அவற்றை கிச்சன் அலமாரிகளில் வைக்கலாம். அதேபோல், புதினாவின் பிரெஷ்ஷான நறுமணம் வீட்டிற்கு புத்துணர்ச்சி தருவதுடன், பூச்சிகளையும் அண்டவிடாது.

இவற்றுடன் ரோஸ்மேரி , லாவெண்டர் மற்றும் கேட்னிப்  போன்ற தாவரங்களும் சிறந்த பலனைத் தருகின்றன. ரோஸ்மேரி செடியில் உள்ள நறுமண எண்ணெய் கரப்பான் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. மனிதர்களுக்கு மன அமைதியைத் தரும் லாவெண்டர் நறுமணம், கரப்பான் பூச்சிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. மேலும், கேட்னிப் தாவரத்தில் உள்ள ‘நெபெட்டாலக்டோன்’ என்ற வேதிப்பொருள் பூச்சிகளை தூர வைக்கக்கூடிய வல்லமை கொண்டது. லெமன்கிராஸ்  மற்றும்  சாமந்தி போன்ற செடிகளும் இந்த பட்டியலில் அடங்கும்.

சாமந்தி பூவில் உள்ள ‘பைரெத்ரின்ஸ்’  என்ற வேதிப்பொருள் பல பூச்சிக்கொல்லி மருந்துகளில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வாசனைத் தாவரங்கள் கரப்பான் பூச்சிகளை விரட்டுவதில் இயற்கையான மற்றும் பாதுகாப்பான வழியைக் காட்டினாலும், வீட்டை எப்போதும் தூய்மையாகவும், ஈரப்பதமின்றியும் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். முறையான தூய்மையுடன் சேர்த்து, இந்த மூலிகைத் தாவரங்களையும் வீட்டில் வளர்த்து வந்தால், எந்தவித ரசாயன பாதிப்புகளும் இன்றி கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்.