UPSC தேர்வில் வெற்றி கிடைக்குமா இல்லையா என்பது பின்னர் தெரியும். ஆனால் அதற்காக முயற்சி செய்வதே மிகப்பெரிய அனுபவம் என்ற எண்ணத்துடன் வாழும் இளைஞரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டோ ஓட்டிக்கொண்டே UPSC தேர்வுக்குத் தயாராகும் அந்த இளைஞரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அவரது காதில் ஹெட்போன் அணிந்தபடி ஆன்லைன் வகுப்பைக் கேட்டுக்கொண்டே, கிடைக்கும் நேரத்தை முழுமையாக படிப்புக்காக பயன்படுத்தும் காட்சி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

“>

வைரலான அந்த வீடியோவில், அவரிடம் “UPSC தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்படுகிறது. அதற்கு அவர் மிகவும் அமைதியாக, “UPSC ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை… அனுபவம் கிடைக்கும். முயற்சி செய்த திருப்தி இருக்கும்” என்று பதிலளிக்கிறார்.

அவரது இந்த நேர்மறை சிந்தனையும், தோல்வியைக் கூட கற்றலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் பலரது மனதை வென்றுள்ளது. வாழ்க்கையில் வெற்றி மட்டுமல்ல, பயணமும் முக்கியம் என்பதை அவரது பதில் உணர்த்துவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது. “இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் உண்மையான ஊக்கமூட்டும் மனிதர்கள்”, “கஷ்டப்பட்டு உழைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்”, “தோல்வியை அஞ்சாமல் கனவை நோக்கி ஓடும் இவருக்கு நாடே சல்யூட்” என ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொருளாதார சவால்கள் இருந்தாலும் கனவை கைவிடாமல் உழைத்தால் சாதிக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த இளைஞரின் பயணம் பார்க்கப்படுகிறது.