ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது சிறுமி கல்யாணி, சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.
மேலும் சம்பவத்தன்று, அவர் வெளியில் சென்று வருவதாகத் தனது தாயிடம் கேட்டுள்ளார். ஆனால், “பெண்கள் தனியாக வெளியே செல்லக்கூடாது” என்று தாய் கண்டித்துவிட்டு வேலைக்குச் சென்றதால், மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய தாய், தனது மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இருப்பினும், அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பர்கூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறிய காரணங்களுக்காக மாணவர்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது பெற்றோரிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
