ஈரோடு மாவட்டத்தின் நட்சத்திர தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே மிகக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, 1980 முதல் இத்தொகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த கே.ஏ. செங்கோட்டையன், தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்து ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுவது களத்தை அதிரவைத்துள்ளது.
மேலும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கோபியில், செங்கோட்டையன் இல்லாத அதிமுகவிற்கும், எடப்பாடியை எதிர்த்து நிற்கும் செங்கோட்டையனுக்கும் இடையிலான இந்த நேரடிப் போர் தேர்தல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மும்முனைப் போட்டியில் களநிலவரம் மிகவும் சிக்கலாக உள்ளது.
இதனால் செங்கோட்டையனின் வெளியேற்றத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி பிரியும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்த வாக்குகள் இரட்டை இலைக்குச் செல்லுமா அல்லது செங்கோட்டையனின் தனிப்பட்ட செல்வாக்கால் தவெக-விற்குச் செல்லுமா என்பதே வெற்றியினைத் தீர்மானிக்கும்.
இந்நிலையில் வாக்குகள் இவ்வாறு சிதறும்பட்சத்தில், கடந்த காலங்களில் இங்கு ஒருமுறை கூட வெற்றி பெறாத திமுக, இம்முறை பிளவுகளைப் பயன்படுத்தி முதன்முதலாக ‘உதயசூரியனை’ உதிக்கச் செய்யத் துடிக்கிறது. இருப்பினும், இரட்டை இலை விசுவாசிகள் மற்றும் செங்கோட்டையனின் மக்கள் செல்வாக்கு ஆகியவற்றுக்கு இடையே திமுக எந்தளவுக்கு வாக்குகளைத் தக்கவைக்கும் என்பதைப் பொறுத்தே கோபியின் வெற்றியாளர் முடிவாகும்.
