பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கருவுற்றிருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்திய சட்டப்படி 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது சிக்கலானது என்றும், மருத்துவ ரீதியாக இது அந்தச் சிறுமிக்கு ஆபத்தானது என்றும் கூறி மத்திய அரசு இந்த உத்தரவைச் சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தது.

​இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத்திய அரசின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தது. “சட்டம் என்பது கால மாற்றத்திற்கு ஏற்பவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும் மாற வேண்டும்” என்று நீதிபதிகள் காரசாரமாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அல்லது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய எந்தவிதக் காலக்கெடுவும் இருக்கக்கூடாது என்றும், 30 வாரங்கள் ஆகிவிட்டது என்பதற்காக ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமையின் அடையாளத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கச் சொல்ல முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் நடைமுறையில் உள்ள கருக்கலைப்புச் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான முக்கிய சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.