மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் உள்ள லாரோலி கிராமத்தில், புஷ்பேந்திர பாகேல் என்பவரது மனைவி மாலதி, தனது குடும்பத்தினர் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார்.
வீட்டின் பின்பக்க சுவரில் ஒரு பெரிய துளையை போட்டு, பீரோவை உடைத்து, துணிகளை இங்கும் அங்குமாக வீசி எறிந்து, உண்மையான கொள்ளை நடந்தது போன்ற தோற்றத்தை உருவாக்கினார். பின் காலையில் ஊர் மக்களைத் திரட்டி, “யாரோ திருடர்கள் வந்து என்னைத் தாக்கி மயக்கமடையச் செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றுவிட்டனர்” எனப் புலம்பினார்.
தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, மாலதியின் உடலில் காயங்கள் இல்லாததும், வீட்டின் நிலைமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. கைரேகை நிபுணர்கள் சோதனையில் வெளிநபர்கள் யாரும் உள்ளே வந்ததற்கான தடயங்கள் கிடைக்கவில்லை.
இதனால் போலீசார் மாலதியைத் துருவித் துருவி விசாரித்தபோது, அவரே நகைகளைத் திருடி அருகில் இருந்த வயல்வெளியில் மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்ட போலீசார், பேராசை காரணமாகச் சொந்த வீட்டைச் சீரழித்த மருமகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
