தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் இடத்தில் ஆவது தமிழக வெற்றி கழகம் வென்றால் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சவால் விட்டுள்ளார். இதனை தற்போது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்து ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது,
தமிழக மக்கள் தேர்தலில் தோற்கடித்த ஆணவமும் அகங்காரமும் இன்னும் மாறவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து தங்களின் தவறுகளை சிந்திக்க வேண்டிய நேரத்தில், அதே ஆணவத்துடனும் அலட்சிய மனப்பான்மையுடனும் சிலர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ். பாரதியின் சமீபத்திய பேச்சு, மக்கள் நிராகரித்த அதே மனநிலையையே மீண்டும் வெளிப்படுத்துகிறது. தாங்களே மக்களை விட பெரியவர்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கத் தொடங்கும் போது, ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை மக்கள் நினைவூட்டுவார்கள்.
இந்த ஆணவப் போக்கு தொடர்ந்தால் வரலாறு மீண்டும் திரும்பும். தமிழக மக்கள் அகங்காரத்தை நீண்ட காலம் சகித்ததில்லை; இனியும் சகிக்கப் போவதில்லை. இன்று அவர் ஆர்.எஸ். பாரதி என்று அழைக்கப்படலாம். ஆனால் இந்த போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அடுத்த ஆண்டு மக்கள் அவரை “அரைமீசை பாரதி” என்றே நினைவுகூரும் நிலை உருவாகலாம். மேலும் மக்களின் தீர்ப்பு மிகவும் தெளிவானது: மக்கள் தீர்ப்பை மதியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
