“தமிழக பா.ஜ.க-வில் உட்கட்சிப் பூசல்களும் சலசலப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் தனது பதவியையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது தமிழக பா.ஜ.க-வில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், கட்சியில் எனக்கு ஏற்பட்ட சில தனிப்பட்ட கடினமான அனுபவங்களின் காரணமாகவும் மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன்’ என்று மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஊடகங்களில் கட்சியின் முகமாகச் செயல்பட்டு வந்த முக்கிய நிர்வாகி ஒருவர், தலைமை மீதுள்ள அதிருப்தியை வெளிப்படையாகப் பறைசாற்றிவிட்டு பா.ஜ.க-விலிருந்து வெளியேறியிருப்பது கமலாலய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், தமிழக அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.”