மேற்கு வங்க மாநிலம், துர்காபூரில் எட்டாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, கடந்த சனிக்கிழமை மதியம் சிம்ரன் தமாங் என்ற தோழி, ஆசை வார்த்தைகளைக் கூறி அந்தச் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஒரு காரில் வைத்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கலந்த மதுபானத்தைக் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்துள்ளனர்.
அதன்பின், ஒரு ஹோட்டலுக்குச் சிறுமியை கடத்திச் சென்று, அங்கிருந்த ராஜ் மல்லிக், ஷேக் அசாருதீன் மற்றும் எஸ்.கே. தாஸ் ஆகியோர் அந்த அப்பாவிச் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, மயக்க நிலையிலிருந்த சிறுமியை சாலையில் வீசிவிட்டு குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர். அன்று இரவு 10:30 மணியளவில், அந்த வழியே வந்த மின்சார ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ஆபத்தான நிலையிலிருந்த சிறுமியை மீட்டுப் பாதுகாப்பாக வீட்டில் ஒப்படைத்துள்ளார்.
தற்பொழுது சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என அவரது தந்தை முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சதித்திட்டம் தீட்டிய சிம்ரன் தமாங், முக்கிய குற்றவாளிகளான ராஜ் மல்லிக், ஷேக் அசாருதீன் மற்றும் அந்த ஹோட்டல் மேலாளர் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளது.
மேலும் தலைமறைவாக உள்ள எஸ்.கே. தாஸ் என்பவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்த பாஜக தலைவர் பரிஜத் கங்குலி, இத்தகைய பாலியல் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களை உடனடியாக ‘என்கவுன்டரில்’ சுட்டுக்கொல்ல வேண்டும் என அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
