கான்பூர் தேஹாத் மாவட்டத்திலுள்ள அக்பர்பூர்  பகுதியில், மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே நடந்துள்ள வினோதமான காதல் திருமணம் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிரவைத்துள்ளது. தனது மாமியாரின் அழகில் மயங்கிய மருமகன், ஆசை ஆசையாய் கட்டிய மனைவியைத் தவிக்கவிட்டு, மாமியாரை அழைத்துக் கொண்டு கான்பூர் நீதிமன்றத்திற்குச் சென்று ரகசியமாக சட்டப்பூர்வ திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடி தங்களது திருமணத்தை ரகசியமாக வைக்காமல், “நாங்கள் இருவரும் மனப்பூர்வமாகத் தான் திருமணம் செய்துகொண்டோம், எங்களை அனைவரும் ஆசீர்வதியுங்கள்” என்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இவர்களது காதல் லீலைகள் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த புதுமணத் தம்பதி தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

 

நீண்ட நாட்களாக மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், குடும்பத்தையும் சமூகத்தையும் மதிக்காமல் இருவரும் சேர்ந்து வாழ இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதேபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு அலிகார் மாவட்டத்திலும் நடந்துள்ளது; அங்கு மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிகை அடிக்கப்பட்ட நிலையில், மணப்பெண்ணின் தாய் தனது வருங்கால மருமகனுடன் ஓடிப் போய் திருமணம் செய்தார். ஆனால், அங்கு ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்குள் சண்டை வெடித்து அந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கான்பூரில் நடந்துள்ள இந்த மாமியார்-மருமகன் திருமண விவகாரத்தில் இன்னும் காவல்துறை தலையிடவில்லை என்றாலும், தலைமறைவான ஜோடியை உறவினர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.