மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு மருத்துவமனைகளுக்கு இடையே முறையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், உடல்நலகக்குறைவால் பாதிக்கப்பட்ட 12 வயது மகனின் உடலை கொளுத்தும் வெயிலில் ஸ்டிரெச்சரிலேயே பெற்றோர் தள்ளிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையிலிருந்து மற்றொரு அரசு மருத்துவமனைக்கு மாற்ற வாகன வசதி கேட்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், நீண்ட நேரமாகியும் உரிய ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால், மனமுடைந்த பெற்றோர் தங்களது மகனை ஸ்டிரெச்சரில் கிடத்தி, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரதான சாலையிலேயே மாறி மாறி தள்ளிக் கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் காண்போரை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
#WATCH | ம.பி: இந்தூரில் ஆம்புலன்ஸ் இல்லாததால் 2 அரசு மருத்துவமனைகளுக்கு இடையே கடும் வெயிலில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 12 வயது மகனை ஸ்ட்ரெச்சரில் வைத்து சாலையில் மாறி மாறி தள்ளிக் கொண்டே சென்ற பெற்றோர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து இதுகுறித்து விசாரணை… pic.twitter.com/3lJTYI6cOa
— Sun News (@sunnewstamil) June 8, 2026
நெஞ்சை உலுக்கும் இந்த அவலக் காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக இணையத்தில் பரவி வரும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு மற்றும் அவசரக்கால வாகனச் சேவையின் அலட்சியப் போக்கை இச்சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
