சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில், தனது சப்போர்ட் ஸ்டாப்பில் ஐபிஎல் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசியைக் களமிறக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலியாவின் பிரபல  ஊடகத்தின் தகவலின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்  தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் வழங்கப்படாவிட்டாலும், பிளெமிங்கின் முதல்கட்ட விருப்பப் பட்டியலில் மைக் ஹசிதான் முன்னணியில் உள்ளார். சிஎஸ்கே அணியில் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றிய இந்த ஜோடி, இங்கிலாந்து அணியிலும் கைகோர்க்கக்கூடும் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எஸ். தோனியின் தலைமையில் பல ஆண்டுகள் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களாகத் திகழும் பிளெமிங்கும், ஹசியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மிக நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-ல் வீரர்களாக ஆரம்பித்த இவர்களின் பயணம், தற்போது வெற்றிகரமான பயிற்சியாளர் கூட்டணி வரை தொடர்கிறது. தற்போது 51 வயதான மைக் ஹசி சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் வெல்ஷ் ஃபயர் அணியின் பயிற்சியாளராகவும் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் பொறுப்பை ஏற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

ஸ்டீபன் பிளெமிங் வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்கிடையில், வரும் ஆகஸ்ட் 19 முதல் ஹெடிங்லேயில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடைக்காலப் பயிற்சியாளராக மார்கஸ் டிரெஸ்கேத்திக் தொடரவுள்ளார். ஒருவேளை மைக் ஹசி இந்த இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்றால், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் மீண்டும் ஆஷஸ் மோதல்களுடன் தொடர்புடைய ஒரு முக்கிய முகமாக மாறுவார்.