வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்க உள்ள இலங்கை அணிக்கான டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், கொழும்புவில் முகாமிட்டுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்காக நடத்தப்பட்ட சிறப்புப் பயிற்சி அமர்வின் போது, ஐபிஎல் தொடர்களில் தனது மிரட்டலான பேட்டிங்கால் கவனம் ஈர்த்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஸ்பின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டார். எந்தவித முன் த்ரோடவுன் பயிற்சிகளுக்கும் செல்லாமல் நேரடியாக நெட்ஸுக்குள் நுழைந்த படிக்கல், சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துகளைச் சமாளிக்க திணறியதுடன், அவரது கால் அசைவுகளிலும் பெரும் குறைபாடுகள் வெளிப்பட்டன.
நெட்சில் சுமார் 40 நிமிடங்கள் வரை பேட்டிங் செய்த தேவ்தத் படிக்கலை, சுழற்பந்து வீச்சாளர் சராஷ் ஜெயின் தனது துல்லியமான பந்துவீச்சால் தொடர்ந்து திணறடித்ததுடன், பலமுறை அவரது மட்டையின் வெளி விளிம்பிலும் பந்தைக் கடத்தினார். அதுமட்டுமின்றி, முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களின் ஆகியோரின் பந்துகளையும் படிக்கல் எதிர்கொள்ள முடியாமல் உள்புற விளிம்புகளில் பந்துகளைத் தட்டியபடி சங்கடப்பட்டார். இந்த ஒட்டுமொத்த பயிற்சியையும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிக அருகில் நின்று மிகுந்த தீவிரத்துடன் கண்காணித்து வந்தார்.
கடந்த காலங்களில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில், எதிரணி சுழற்பந்து வீச்சாளர்களின் சுழல் வலையில் இந்திய அணி சிக்கித் திணறி தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தவறுகள் எவையும் இந்த முறை இலங்கையில் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள அணி நிர்வாகம், சுழலைச் சமாளிக்கும் நுணுக்கங்கள் குறித்து வீரர்களுக்குத் தீவிர ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதனிடையே, பயிற்சியின் போது கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் கோச் சிடான்சு கோடக் ஆகியோர் சுப்மன் கில், துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்களுடன் நீண்ட நேரம் பேசி அவர்களது பேட்டிங் நுட்பங்களைச் சரிசெய்வதில் முழு முனைப்புடன் செயல்பட்டனர்.
