மத்திய பிரதேச மாநிலம், பந்துர்னா மாவட்டம் கார்காட் கம்தி கிராமத்தில் அரசு அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவு பொட்டலத்தில் இறந்த பாம்பு குட்டி ஒன்று கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான வச்சல பாய் துர்வே, அங்கன்வாடி மையத்திற்குச் சென்று கர்ப்பிணிகளுக்கான சத்துணவு பொட்டலத்தைப் பெற்றுள்ளார். அதனை அவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று பிரித்துப் பார்த்தபோது, உள்ளே இறந்த நிலையில் குட்டிப் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் உறைந்து போய் அலறியுள்ளது.

​இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அரசு அங்கன்வாடிகள் மூலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கிராம மக்கள் தங்களின் பலத்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, இந்த அஜாக்கிரதைக்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆக்ரோஷமாக வலியுறுத்தியுள்ளனர். சோசியல் மீடியாவிலும், அல்காரிதத்திலும் இச்சம்பவம் தற்சமயம் காட்டுத்தீயாய் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.