பஞ்சாப் அரசியலில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு எதிராக அக்கட்சித் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் வீட்டின் சுவரில் “பஞ்சாபின் துரோகி” என மர்ம நபர்கள் கருப்பு பெயிண்டால் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் முன் திரண்ட ஆம் ஆத்மி தொண்டர்கள் கைகளில் கருப்புப் பட்டைகளை அணிந்து ஆவேசமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிரடியாகப் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “ராகவ் சதா, ஹர்பஜன் சிங் போன்றவர்கள் பதவி ஆசைக்காகவும், பயத்தினாலும் பாஜகவிற்குத் தாவியுள்ளனர்; இவர்கள் மக்களையும் கட்சியையும் ஏமாற்றிய பச்சைத் துரோகிகள்” எனச் சாடியுள்ளார். பாஜக மாநிலக் கட்சிகளை அழிக்கும் நோக்கில் பயமுறுத்தியும் ஆசை காட்டியும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாகவும், ஒரு சில சுயநலவாதிகள் செல்வதால் ஆம் ஆத்மி ஒருபோதும் பலவீனமடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
