நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. வங்கியின் நிர்வாக முறை மற்றும் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் நலனுக்கும், பொதுநலனுக்கும் பாதகமாக இருப்பதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளைப் பேடிஎம் வங்கி தொடர்ந்து மீறி வந்ததாகவும், வங்கியின் மேலாண்மை திருப்திகரமாக இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வங்கியைக் கலைப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வங்கியைக் கலைக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையைத் திருப்பிச் செலுத்தப் போதுமான பணப்புழக்கம் வங்கியிடம் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் புதிய டெபாசிட்டுகள் மற்றும் வாலட் டாப்பப்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உரிமமே ரத்து செய்யப்பட்டிருப்பது பேடிஎம் நிறுவனத்திற்குப் பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
