இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், தனது எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தலைமைத்துவப் பண்பு குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்திய அணியை வழிநடத்துவது எனக்குக் கிடைத்த பெருமை. இந்த சவாலை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதற்காக என் தனித்துவத்தையோ, அடையாளத்தையோ நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். நான் எப்போதும் போலத்தான் இருப்பேன், யாருடைய நிழலிலும் இருந்து செயல்பட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்தபோதும், அதன் முழுப் பாராட்டும் அப்போதைய ஆலோசகர் கௌதம் கம்பீருக்கே சென்றது. தற்போது கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் சூழலில், ஸ்ரேயாஸின் இந்த “யாருடைய நிழலிலும் இருக்க மாட்டேன்” என்ற அறிக்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 டிசம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காமல், உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் (2024-ல் KKR சாம்பியன், 2025-ல் பஞ்சாப் கிங்ஸ் ரன்னர்-அப்) தனது அசாத்திய கேப்டன்ஷிப் திறமையால் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் அடுத்தடுத்த ஐசிசி தொடர்களை மனதில் வைத்து பிசிசிஐ இவரை கேப்டனாக நியமித்துள்ளது.
திலக் வர்மாவைத் துணை கேப்டனாகக் கொண்டு, ஜூன் 26-ல் தொடங்கவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மூலம் ஸ்ரேயஸ் ஐயர் தனது சர்வதேச கேப்டன்ஷிப் பயணத்தை கம்பீரமாகத் தொடங்குகிறார். வெறும் வெற்றிகளைத் தேடுவது மட்டுமல்லாமல், இந்திய அணிக்கு அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை வென்று தரும் ஒரு வலுவான இளம் படையை உருவாக்குவதே தனது முதன்மை இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
