ஐபிஎல் 2026 தொடரில் வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, 16 இன்னிங்ஸ்களில் 48.50 சராசரியுடன், 237.30 என்ற அசாத்திய ஸ்டிரைக் ரேட்டில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று உலகையே மிரட்டினார். இந்த அசாத்திய சாதனைக்குப் பிறகு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “வைபவ் சூர்யவன்ஷிக்கு வெறும் 15 வயதுதான் ஆகிறது; அவர் மீது இப்போதே எதிர்பார்ப்பு என்ற பெரிய சுமையையோ, அழுத்தத்தையோ திணிக்கக் கூடாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த உடனே ஏதோ பெரிய மிராக்கிள் செய்வார் என்று எதிர்பார்க்காமல், அவரது இயல்பான ஆட்டத்தை விளையாட நாம் அவருக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று மிகவும் பக்குவமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய கங்குலி, “இந்தியாவின் ஆடுகளங்களுக்கும், இங்கிலாந்தின் ஆடுகளங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இங்கிலாந்தில் பந்து நன்றாக பவுன்ஸ் மற்றும் சீம் ஆகும் என்பதால் புதிய பந்தின் ஸ்விங்கை எதிர்கொள்ள வைபவ் தனது ஆட்டத்திறனை மாற்றியமைக்க வேண்டும்; அது அவருக்குப் பெரிய சவாலாக இருக்கும். இருந்தாலும் வைபவ்விடம் அபாரமான திறமை உள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று பாராட்டியுள்ளார்.

மேலும் 15 ஆண்டுகள் 71 நாட்களில் இந்திய அணியில் இடம்பிடித்து ‘மிக இளம் இந்திய வீரர்’ என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள வைபவ்,  சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.