அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று புதன்கிழமையுடன் முடிவுக்கு வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ ரீதியாகத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், இது தங்களுக்குச் சாதகமான அம்சம் என டிரம்ப் கருதுகிறார்.

ஆனால், இந்த முற்றுகையை நீக்கினால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியம் என ஈரான் பிடிவாதம் காட்டி வருவதால் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட போதிலும், ஈரான் பணிய மறுத்து தொடர்ந்து மோதி வருகிறது. இந்தப் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வியடைந்து மீண்டும் போர் தொடங்கினால், அது உலகப் பொருளாதாரத்தையும், சர்வதேச எரிசக்தி விநியோகத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவின் ‘அதிகபட்ச அழுத்தம்’ கொடுக்கும் தந்திரம் ஈரானை பணிய வைக்குமா அல்லது உலகையே போருக்குள் தள்ளுமா என்பது இன்று தெரியவரும்.