அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கர்ட் (56) என்ற கடல் மூழ்காளர், கேப் காட் கடல் பகுதியில் வழக்கம் போல் கடல் உணவுகளைப் பிடிப்பதற்காக 45 அடி ஆழத்தில் மூழ்கியபோது, எதிர்பாராதவிதமாக ஒரு ராட்சத ஹம்ப்பேக் திமிங்கலத்தின் (Humpback Whale) வாய்க்குள் சிக்கிக்கொண்டார். கடலுக்கு அடியில் திடீரென ஏற்பட்ட பலத்த அதிர்வை உணர்ந்த மைக்கேல், தன்னை ஏதோ ஒரு பெரிய சுறா மீன் கவ்விக்கொண்டதாகவே முதலில் நினைத்துள்ளார்.
ஆனால், தன்னைச் சுற்றி கூர்மையான பற்கள் எதுவும் இல்லாததையும், ஒரு பெரிய அழுத்தத்தையும் உணர்ந்தபோதுதான், தான் திமிங்கலத்தின் வாய்க்குள் இருப்பதை அவர் அறிந்தார். சுமார் 30 முதல் 40 நொடிகள் வரை அந்தத் திமிங்கலத்தின் வாய்க்குள் மரண பயத்தில் சிக்கியிருந்த மைக்கேல், தனது ஆக்சிஜன் சிலிண்டர் உதவியோடு மூச்சுவிட்டுக் கொண்டு தனது இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தார்.
ஆனால், தான் விழுங்கியது தனக்கான உணவு அல்ல என்பதை உணர்ந்த அந்த ராட்சத திமிங்கலம், உடனடியாகக் கடலின் மேற்பரப்பிற்கு வந்து தனது தலையை பலமாக அசைத்து மைக்கேலை காற்றில் தூக்கி வீசியது. திமிங்கலத்தின் வாயில் இருந்து பத்திரமாக வெளியே விழுந்த அவரை, அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கிய போதிலும், மைக்கேலின் உடலில் ஒரு எலும்பு கூட முறியாமல், சிறு கீறல்களுடன் அவர் உயிர் பிழைத்தது மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்துக் கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஹம்ப்பேக் திமிங்கலங்கள் அளவில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவற்றின் தொண்டைப்பகுதி மிகவும் குறுகியதாக இருக்கும் என்பதால், மனிதர்களை அவற்றால் விழுங்க முடியாது என்றும், சிறிய மீன்களை வேட்டையாடும் போது மைக்கேல் தற்செயலாக அதன் வாய்க்குள் சிக்கியுள்ளார் என்றும் விளக்கியுள்ளனர்.
