தமிழகத்தில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் இன்னும் பல இடங்களில் இயங்கி வருவதாக எழுந்திருக்கும் புகாரைத் தொடர்ந்து, இது குறித்து தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூடப்பட்ட கடைகளின் பட்டியலைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டபோது, கோப்பு நிலுவையில் இருப்பதாகக் கூறி அரசு மழுப்பலாகப் பதிலளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மற்ற விஷயங்களுக்குத் தீவிரமாக ஆய்வு செய்யும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் மட்டும் ஏன் உண்மையை மறைக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கும் தவெக ஆட்சியாளர்கள், மடியில் கனமில்லையெனில் வெள்ளை அறிக்கை வெளியிடப் பயப்படுவது ஏன் என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார்.

எனவே, காலதாமதம் செய்யாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகளைப் பட்டியலிட்டு, வெளிப்படையான வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் வெளியிட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தூய சக்தி என்று முழக்கமிட்டு ஆட்சி செய்யும் அரசு, இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லத் தயங்கக்கூடாது என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.