பிரிட்டனின் வால்சால் பகுதியில் சீக்கியப் பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஜான் ஆஷ்பி (John Ashby) என்பவன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். கடந்த அக்டோபர் மாதம் பேருந்திலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து சென்ற ஆஷ்பி, அவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.
அந்தப் பெண்ணின் கையில் இருந்த குச்சியைப் பிடுங்கி அவரை மிரட்டியதோடு, வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, “நான் உன்னுடன் ஜாலியாக இருக்க (Fun பண்ண) விரும்புகிறேன்” என்று கூறி அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளான். பாதிக்கப்பட்ட பெண் தான் ஒரு சீக்கியர் என்று கதறியும், அவனை மத ரீதியாக இழிவுபடுத்தி இக்கொடுமையைச் செய்துள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், சிசிடிவி காட்சிகள் மற்றும் அங்கிருந்த டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள் ஆஷ்பிக்கு எதிராகத் துல்லியமாக அமைந்தன. பாதிக்கப்பட்ட பெண்ணின் நகைகள் மற்றும் செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடிய அவனை, காவல்துறையினர் சில நாட்களில் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “வேடிக்கைக்காக (Fun)” இத்தகைய கொடூரங்களைச் செய்பவர்கள் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று சாடினார். அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
