உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பிரதீக் மிஸ்ரா என்ற நபர் தனது 11 வயது இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. 2014-ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரதீக், ஆரம்பத்திலிருந்தே தனது மனைவி ரேஷ்மாவைச் சித்திரவதை செய்து வந்துள்ளார்.
மனைவியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வீட்டின் பெட்ரூம் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய அந்த நபர், மனைவியைத் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல விடாமல் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று இரவு, தனது மகள்களைத் தனது அறைக்குத் தூங்க அழைத்துச் சென்ற பிரதீக், நள்ளிரவு 2:30 மணிக்கு அவர்களைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அவரே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சியில் தனது கணவன் ஒரு மகளை பாத்ரூமுக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்ததாகவும், அதன் பின் எந்தச் சத்தமும் வராததால் அவர்கள் தூங்கிவிட்டதாக நினைத்ததாகவும் தாய் ரேஷ்மா கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். தற்போது கொலையாளி பிரதீக்கை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
