ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாணவர் விடுதி ஒன்றின் உணவகத்திற்குள் முதலை ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரல் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இந்த விடுதியின் தரைதளத்தில் உள்ள உணவகத்திற்குள், படிக்கட்டுகள் வழியாக முதலை அமைதியாக நடந்து செல்வதை சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன.

இந்த எதிர்பாராத விருந்தினரைக் கண்ட சமையல் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். முதலை புகுந்ததைக் கண்டு சிலர் அதனைப் பிடிக்க முயன்று குளறுபடியை ஏற்படுத்திய நிலையில், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அருகில் உள்ள வடிகால் வழியாக மழைக்கால வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, இந்த முதலை விடுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், எவ்வித பாதிப்பும் இன்றி முதலையைப் பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர், பிடிக்கப்பட்ட அந்த முதலை அதன் இயற்கை வாழ்விடமான சம்பல் நதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த விடுதிக்குள் முதலை நுழைந்த இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.