சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர், இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய் பணத்தை (1.61 லட்சம் டாலர்கள்) திடீரென பால்கனி வழியாகச் சாலைகளில் வாரி இறைத்த சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Daily Mail (@dailymail)

வானத்திலிருந்து மழை போலப் பொழிந்த 1000 ரூபாய் நோட்டுகளைக் கண்ட அப்பகுதி மக்கள், ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பணத்தைச் சேகரிக்கச் சாலையில் அலைமோதினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. விசாரணையில் அந்தப் பெண் தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் நெருங்கிய நண்பர் ஒருவரின் உடல்நிலை பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே இப்படிச் செய்ததாகத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தலையிட்டுச் சிதறிக் கிடந்த பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், சாலையில் இருந்து பணத்தை எடுத்துச் சென்ற மக்கள் அதனை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ஹாங்காங்கில் ஒருவர் பணத்தை வாரி இறைத்துச் சிறைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் பெண்ணின் ‘பண மழை’ வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருவதுடன், “பணம் இருந்தாலும் நிம்மதி இல்லை” எனப் பலரையும் புலம்ப வைத்துள்ளது.