தமிழகத்தில் நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய புகாரால், தமிழக அரசியலில் பெரும் புயல் வீசி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் நேரடி ‘யுத்தமே’ நடந்து வருகிறது.

“மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை வெளியிடத் தயாரா?” என ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு, நீண்ட விளக்கம் ஒன்றை நிர்மலா சீதாராமன் அளித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், “தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை மட்டும் வெளியிட்டிருந்தாலே போதும், மக்கள் உண்மையை அறிந்திருப்பார்கள்.

அதை விடுத்து இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதியதிலேயே உங்கள் குட்டு அம்பலமாகிவிட்டது” எனச் சாடியுள்ளார். மேலும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் நெல்லுக்கு ஊக்கத்தொகை தர வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு ஆதாரமாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பதிவைச் சுட்டிக்காட்டியுள்ளார். “பினராயி விஜயனின் பதிவே இதற்குச் சாட்சி” எனக் கூறி அந்தப் பதிவையும் தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து நிர்மலா சீதாராமனுக்கு ‘செக்’ வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆதாரங்களுடன் முதல்வர் கொடுத்த இந்த பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்கடுத்தபடியாக மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.