தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் அவர் மேற்கொண்ட பரப்புரை தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, விஜய் சைக்கிள் ஓட்டி வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதுடன், பல்வேறு அதிரடி வாக்குறுதிகளையும் அள்ளி வீசினார்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்றதால் கன்னியாகுமரியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தச் சூழலில், விஜய்யை எப்படியாவது அருகில் இருந்து பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில் தொண்டர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பரப்புரை வாகனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்ததால், கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க அந்தத் தொண்டர் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சாக்கடை கால்வாயிலேயே நீந்தி வந்ததாக ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கால்வாயில் இருந்து மேலே ஏறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

“தலைவர் மீதான அன்பு ஒருபுறம் இருந்தாலும், இப்படி உயிரைப் பணயம் வைத்துச் செய்வது சரியா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எது எப்படியோ, விஜய்யின் வருகை தென் மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மட்டும் நிதர்சனம்.