பீகார் மாநிலத்தின் பர்க்கா கிராமத்தில், 6 மாதக் குழந்தையொன்று அதன் பெற்ற தாயாலேயே அரிவாளால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பச்சிளம் குழந்தை புஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் தந்தை சுனில் தாஸ் கூலி வேலைக்காக சென்ற நிலையில், வீட்டில் தாய் சீமா தேவி மற்றும் குழந்தையின் பாட்டி சரஸ்வதி தேவி ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு, குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் கடுமையான ஆத்திரமடைந்த தாய் சீமா தேவி, வீட்டில் இருந்த விவசாயத்திற்குப் பயன்படுத்தும் அரிவாளை எடுத்துப் பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் அவரும் அதே அரிவாளால் தனது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வீட்டிற்குள் இருந்து கேட்ட அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பாட்டி சரஸ்வதி தேவி, குழந்தை ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தனது மருமகள் தற்கொலைக்கு முயல்வதைப் பார்த்துப் போராடி அவரிடமிருந்த அரிவாளைப் பிடுங்கி, அக்கம் பக்கத்தினரின் உதவியோடு காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கழுத்தில் பலத்த காயமடைந்த சீமா தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாமியாரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் கடுமையான மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது போல் தெரிவதாகவும், எனினும் முழுமையான மருத்துவ மற்றும் நீதித்துறை விசாரணைக்குப் பிறகே அவரின் உண்மை நிலை தெரியவரும் என்றும் கோபால்பூர் காவல் நிலைய அதிகாரி அங்கித் குமார் தெரிவித்துள்ளார்.
