அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் முறையான மருத்துவ கவனிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழ்நிலை காரணமாகவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கேஸ்பர் ஓ பிரையன் என்ற அந்தச் சிறுவன் கடந்த நவம்பர் 4ஆம் தேதி அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழக்கும் போது அந்தச் சிறுவனின் உடல் எடை சுமார் 116 கிலோவாக இருந்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜெனிசி மாவட்ட அரசு வழக்கறிஞர் டேவிட் லெய்டன், சிறுவனின் பெற்றோரான டேமியன் ஓ பிரையன் (40) மற்றும் ஜெசிகா ஓ பிரையன் (41) ஆகிய இருவர் மீதும் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தத் தம்பதியருக்கு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

 

பிரேதப் பரிசோதனை மற்றும் முதற்கட்ட விசாரணையின்படி, அந்தச் சிறுவன் கடைசியாக பிப்ரவரி 2024 இல் தான் மருத்துவரைச் சந்தித்துள்ளான். அப்போது அவனுக்குச் சிறப்புப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், பெற்றோர் அவனை அழைத்துச் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், உணவுக் கட்டுப்பாட்டுப் பிரச்சனை காரணமாக அந்தச் சிறுவனுக்குப் பெற்றோர் தொடர்ந்து உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிரெஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளை மட்டுமே வழங்கி வந்துள்ளனர்.

தந்தையின் வேலை மூலம் மருத்துவக் காப்பீடு மற்றும் நல்ல பொருளாதார வசதி இருந்தும், பெற்றோர் குழந்தையைக் கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்களின் 5 வயது மகளும் கடுமையான உடல் பருமனுடன், வீட்டின் வெளியே ஆடைகளின்றி, அழுக்கடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளாள். இந்தத் தம்பதியர் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொடூரமாகத் துன்புறுத்தியது குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.