சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 49 அபூர்வ வகை உயிரினங்களைச் சுங்குத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சூட்கேஸைச் சோதித்தபோது, அதற்குள் 34 கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்புகள், ராஜநாகங்கள் மற்றும் நீல நாக்கு பாம்புகள் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இதில் வட அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் காணப்படும் அரிய வகை பாம்புகளும் அடக்கம். அதேபோல், தாய்லாந்திலிருந்து வந்த விமானத்தில் நீண்ட நேரமாக உரிமை கோரப்படாமல் இருந்த மற்றொரு சூட்கேஸில் மஞ்சள் நிற குரங்குகள், அணில்கள் மற்றும் விஷச் சிலந்திகள் என 15 உயிரினங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பிடிபடுவோம் என்ற பயத்தில் மர்ம நபர் ஒருவர் சூட்கேஸை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார். பிடிபட்ட அனைத்து உயிரினங்களும் இந்தியாவுக்குள் கொண்டு வர அனுமதி இல்லாததால், வனவிலங்கு அதிகாரிகளின் ஆலோசனையின்படி மீண்டும் மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த சர்வதேச கடத்தல் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.