நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கல்களால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது, ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். பலருடைய ரத்தம், வியர்வை மற்றும் உழைப்பில் உருவான இத்திரைப்படம் முறைப்படி திரையரங்கில் வெளியாகும்போது, ஒரு ரசிகனாக நானும் நேரில் சென்று பார்ப்பேன்.

தொடர்ந்து பேசிய அவர், “இப்படத்தில் பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன் குறித்துத் தவறாகப் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது வன்மைத்தனத்தின் உச்சகட்டம். இது நடந்திருக்கக் கூடாது. இருப்பினும், ஒரு படைப்பைச் சட்டவிரோதமாக வெளியிடுவது மிகப்பெரிய குற்றம். எந்த விஷக்கிருமிகள் இதைச் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தைச் சிபிஐ விசாரணைக்குக் கொண்டு சென்றால், பாஜக அதனை முழுமையாக ஆதரிக்கும்,” என்று தெரிவித்தார்.

மேலும் முன்னதாக, இந்தப் படம் இணையத்தில் கசிந்தது ஒரு விபத்தல்ல, அது நிர்வாகத்தின் தோல்வி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.