நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்காசன் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் கூறியதாவது, ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தை ஒரு சிலர் திட்டமிட்டு அரசியலாக்கி வருகின்றனர். குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா எதைப் பார்த்தாலும் அரசியலாக்குகிறார். உங்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதற்கு மத்திய ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதை ஆதவ் அர்ஜுனா கைவிட வேண்டும். ஒரு படத்தின் உழைப்பைச் சீரழிக்கும் வகையில் அதனை இணையத்தில் கசிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சதியின் பின்னணியில் இருக்கும் உண்மை குற்றவாளிகளை போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் செய்தியாளர்களை இதுவரை சந்திக்காத கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்றும் மற்றவர்களை குறை சொல்லியே கட்சியை வளர்க்க நினைக்கிறார்கள் என்றும் விஜயை கடுமையாக சாடினார்.
