தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழலும் சுரண்டலும் மட்டுமே எஞ்சியுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடுமையாகச் சாடியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தேர்தல் களம் 4 முனைப் போட்டியைச் சந்தித்துள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, பின்னர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது, ஆட்சிக்கு வரும் வரை சமூகநீதி, மக்கள் நலன் எனப் பேசிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது. குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ‘நிழல் அதிகாரங்கள்’ மூலம் தமிழகத்தில் சர்வாதிகாரம் நடைபெற்றது.
திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியைத் திரும்பிப் பார்த்தால் ஊழலும் சுரண்டலும் மட்டுமே தெரிவதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட அந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் அரசியல் ஆதாயத்திற்காக எந்தவொரு ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தையே சந்தித்த மக்களுக்கு, தற்போது தலைவர் விஜய் ஒரு பெரும் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். மக்கள் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு களத்தில் நிற்கும் அவரை, மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்க்கிறார்கள். மக்களின் இந்த நம்பிக்கை வரும் தேர்தலில் எதிரொலிக்கும். தலைவர் தலைமையில் அனைவருக்குமான நல்லாட்சி அமையும் என ஆதவ் அர்ஜுனா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
