தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத் திட்டங்கள் திடீர் திடீரென ரத்து செய்யப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக கடந்த 12 நாட்களில் மட்டும் சென்னை, கடலூர் எனப் பல முக்கிய இடங்களின் பிரசாரங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சென்னை வில்லிவாக்கம் மற்றும் டி.நகர் பகுதிகளில் விஜய் மேற்கொள்ளவிருந்த வாகனப் பேரணிக்குக் காவல்துறை தரப்பில் வெறும் 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
“ஸ்டாலின், உதயநிதிக்கு ஒரு நீதி.. தளபதிக்கு ஒரு நீதியா?” என்று தவெக நிர்வாகிகள் கொந்தளித்த நிலையில், போதிய நேரமில்லாத காரணத்தால் அந்தப் பிரசாரத்தை விஜய் அதிரடியாக ரத்து செய்தார்.
இதேபோல் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்யவிருந்த இடத்தின் அருகே திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்டுத் தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தவெக தரப்பில் புகார் வாசிக்கப்பட்டது.
இது போன்ற முட்டுக்கட்டைகளால் தனது வியூகத்தை மாற்றியுள்ள விஜய், தற்போது தென் மாவட்டங்களில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
