தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தில் அரங்கேறிய ஒரு சம்பவம் பெரும் சிரிப்பலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக வேட்பாளர் தமிழ்செல்வியை ஆதரித்து அந்தப் பகுதியில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆவேசமாகப் பேசிய அவர், “தளபதி விஜய்யின் புரட்சிகரமான ஆட்சி அமைய, வேட்பாளர் தமிழ்செல்விக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” எனத் தவறுதலாகக் கூறிவிட்டார்.
விஜய்யின் ‘விசில்’ சின்னத்திற்குப் பதிலாக, பழக்கதோஷத்தில் அதிமுகவின் சின்னத்தை அவர் குறிப்பிட்டதும், அருகில் இருந்த தொண்டர்கள் பதறிப்போய் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர், “இரட்டை இலை சின்னத்திலேயே கேட்டு பழகிவிட்டதால் வாய் தவறி வந்துவிட்டது” எனச் சமாளித்தார்.
ஏற்கனவே தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சத்தியகுமார் போன்றோர் மேடைகளில் மாற்றிப் பேசி ட்ரோல்களில் சிக்கிய நிலையில், தற்போது செங்கோட்டையனும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது சமூக வலைதளங்களில் கிண்டல்களைக் கிளப்பியுள்ளது.
