தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இலுப்பூர் பகுதியில் அதிரடி நடைபயணப் பிரசாரம் மேற்கொண்டார்.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மக்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், வழியில் இருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தபடி பொதுமக்களிடம் சகஜமாகப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சரிடம், நடிகர்களின் அரசியல் வருகை மற்றும் அவர்களைப் பின்தொடரும் இளைஞர்கள் குறித்துக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், நடிகர்களின் வாகனங்களைப் பின் தொடந்து சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், சினிமா மோகத்தில் இருக்கும் அந்த இளைஞர்கள் விரைவில் உண்மையை உணர்ந்து திருந்துவார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே இருப்பதால், நடிகர்களின் அரசியல் என்ட்ரி குறித்த முதலமைச்சரின் இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.