பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கி வந்த நிதியுதவியை ஐக்கிய அரபு அமீரகம் திடீரென நிறுத்தியுள்ளது அந்நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 300 கோடி டாலர் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க அமீரகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

பாகிஸ்தானின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இது சுமார் பதினெட்டு சதவீதம் என்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையால் தவித்து வரும் பாகிஸ்தான் அரசுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச்சந்தை ஒரே நாளில் பதினைந்து சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாகச் சீனா மற்றும் சவுதி அரேபியா போன்ற நட்பு நாடுகளிடம் கடன் வாங்கிப் காலத்தை ஓட்டி வந்த பாகிஸ்தான் அரசுக்கு தற்போது சர்வதேச அளவில் நெருக்கடி முற்றியுள்ளது.

ஏற்றுமதியை அதிகரித்து வருமானத்தைப் பெருக்குவதற்குப் பதிலாகக் கடன் வாங்கியே நிர்வாகத்தை நடத்தி வந்த பாகிஸ்தானின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். வரும் நாட்களில் சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் பாகிஸ்தான் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது.

இதனால் பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.