இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பாத்திமா சனாவும் கைகுலுக்கிக் கொள்வது போன்ற இந்த புகைப்படம், உலகக் கோப்பைக்கு முந்தைய கேப்டன்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், ஐசிசி தலைவருமான ஜெய் ஷா, பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கியது இரு நாட்டு ரசிகர்களிடையே “இந்தியா vs பாகிஸ்தான்” என்ற அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2025 ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் எந்தவித கைகுலுக்கலும் கிடையாது என்ற கடுமையான கொள்கையை இந்திய விளையாட்டு அணிகள் பின்பற்றி வருகின்றன. இதற்கு முன்னதாக கொழும்பில் நடந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது கூட, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பாத்திமா சனாவும் டாஸின் போது கைகுலுக்கிக் கொள்வதைத் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், ஜெய் ஷா கைகுலுக்கியதாக வெளியாகி இருக்கும் இந்த புகைப்படம் உண்மையானதா அல்லது எடிட் செய்யப்பட்டதா என்ற விவாதம் எக்ஸ் தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படம் ரசிகர்களின் பக்கங்களில் மட்டுமே வெளியாகி உள்ளதே தவிர, ஐசிசி அல்லது அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்கள் இதுகுறித்த எந்தவொரு வீடியோ ஆதாரத்தையும் இன்னும் வெளியிடவில்லை.